வடக்கு, கிழக்கில் 100 நாள் செயல்முனைவின் இறுதி நாள் நிகழ்வு!
நூறு நாள் செயல்முனைவின் இறுதி நாள் நிகழ்வு தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் இன்று நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று கோரி 100 நாள் செயலமர்வு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அதன் இறுதி நாள் நிகழ்வு வடக்கு, கிழக்கு தழுவி இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு 100 நாள் செயல்முனைவின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்துக்கான நிகழ்வு வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது, “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துக” எனும் தொனிப்பொருளில் பாதாகையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த இறுதி நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான மயூரன், தியாகராஜா மற்றும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.