ஆவினை தொடர்ந்து ஆரோக்யா பால் விலையும் உயர்வு!
தமிழ்நாடு அரசின் ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால் விலை ரூ.12 உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஆரோக்யா பால் விலையும் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அரசின் ஆவின் நிறுவனம், 38.26 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ளவை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறது.
தமிழகத்தின் பால் தேவையில் 84 சதவீதம் அதாவது 1.25 கோடி லிட்டரை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்வது வருகிறது.
இந்நிலையில் ஹட்சன் நிறுவனம் தயாரித்து விற்று வரும் 1.5 லிட்டர் ஆரோக்கியா ஆரஞ்சு பாக்கெட் ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பச்சை நிற முடி போட்ட பிளாஸ்டிக் கேனில் ரூ.100க்கு விற்கப்படும் பாலும் ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ. 105க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் பாலின் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் உத்தரவிட்டது.
பால் முகவர்களின் கோரிக்கையை ஏற்று, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32லிருந்து, ரூ.35ஆக உயர்த்தப்பட்டது. அதேப்போல் எருமைப்பால் கொள்முதல் விலை 41ல் இருந்து 45க்கு உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை ஈடுகட்டும் வகையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ.60ஆக மாற்றி அமைக்கப்பட்டது.