ட்விட்டர் எங்கே போகிறது? இந்தியாவில் 90% பணியாளர்கள் பணிநீக்கம்!
சா்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் உள்ள தனது 90 சதவீதம் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு ட்விட்டா் சமூக வலைதளத்தை டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கினாா்.
அதையடுத்து, நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க், ட்விட்டரில் பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்து நீலநிறக் குறியீட்டை வழங்க மாதந்தோறும் கட்டணம் 8 டாலர் (இந்தியாவில் சுமாா் ரூ.640) விதிக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.
செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நிறுவனத்தில் உள்ள பணியாளா்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் எலான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ட்விட்டா் நிறுவனப் பணியாளா்கள் பலா் பணியில் இருந்து நீக்கப்பட்டு வந்தனர்.
மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாகவும், மொத்தம் உள்ள 7400 பணியாளர்களில் 3700 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தியாவில் 90 சதவீதம் ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தில் 200 பேர் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த வாரம் 180க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10க்கும் மேற்பட்ட சிலர் மட்டும் இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் பணிபுரிந்து வந்தவர்கள்.
இவைத்தவிர, சந்தைப் படுத்துதல், பொது கொள்கை, பெருநிறுவன தொடர்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகைளை சேர்ந்த பணியாளர்களும் ட்விட்டர் நிறுவன நடவடிக்கையால் பணி இழைப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச அளவில் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 7400 பேரில் சுமார் 3,700 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ட்விட்டரை இந்தியாவில் அதிகயளவில் பயன்படுத்துகின்றனர். ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை 8 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
சா்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் எங்கே போகிறது? என்ற கேள்வி அனைத்து பிரிவினரிடையேயும் பரவலாக எழுந்துள்ளது.