நளினி உள்ளிட்டோர் விடுதலை… வைகோ முதல் செங்கொடி வரை நன்றிகள்… சீமான் அறிக்கை
சூராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீமான், கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும் ஆறு தமிழர்களையும் விடுவித்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களை உள்ளம் களிப்படையச் செய்திருக்கிறது.
ஆறுபேரின் விடுதலையை மட்டுமல்லாது, மாநில அமைச்சரவையின் இறையாண்மையையும், மாநிலத்தின் தன்னுரிமையையும் நிலைநாட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இத்தகையத் தீர்ப்பை வழங்கி நம்பிக்கை வார்த்த நீதியரசர்கள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு நன்றியையும், வணக்கத்தையும் செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் பிறகு, கிடைத்திருக்கிற இவ்வெற்றியை அடைய பாடுபட்ட அத்தனைப்பேருக்கும் தமிழினம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
மேலும், இதற்காக உழைத்திட்ட தலைவர் பெருமக்கள் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் போற்றுதற்குரிய பழ.நெடுமாறன், · மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, · திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, · பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, · திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு.ராமகிருட்டிணன் ,· விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்,
· தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு , விடுதலைக்காகத் துணைநின்ற முன்னாள் நீதியரசர்கள் மதிப்பிற்குரிய கிருஷ்ணய்யர் , கே.டி.தாமஸ் , · மூவர் தூக்கு ரத்து செய்யப்பட முதல் தீர்மானம் நிறைவேற்றிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, · 161வது சட்டப்பிரிவின்படி தீர்மானம் இயற்றிய கடந்த அதிமுக அரசிற்கும், இந்த விடுதலை வழக்கின் சட்டப் போராட்டத்தில் துணைநின்ற முதல்வர் ஸ்டாலின்,
· விடுதலைக்காகத் தொடர்ந்து குரலெழுப்பிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் ஆருயிர் இரத்தம் வேல்முருகன் , கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ.தனியரசு , முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் அன்புத்தம்பி கருணாஸ் , மனிதநேய சனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் எழுவர் விடுதலைக்காக தொடர்ந்து பேசியதிருச்சி வேலுச்சாமி,
· எழுவர் விடுதலை குறித்து தொடர்ந்து புத்தகங்கள் எழுதி போராட்டத்திற்கு துணைநின்ற ஊடகவியலாளர் பா.ஏகலைவன் ,மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ,தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ. வியனரசு, · ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத்,
தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் சோழன் மு.களஞ்சியம் , மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் செ.முத்துப்பாண்டி , வன வேங்கைகள் கட்சித் தலைவர் பொ.மு.இரணியன், தொடர்ந்து போராடிய தோழமை இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும், மனிதஉரிமை ஆர்வலர்களுக்கும், சமூகச்செயற்பாட்டாளர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியையும், பெரும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சட்டப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்த வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி , உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் , தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி , சட்டத்தரணி மூத்தவர் தடா சந்திரசேகரன் , ஆருயிர் இளவல் பிரபு இராமசுப்பிரமணியன் , அன்புத்தம்பி பாரிவேந்தன் , வழக்கறிஞர் உதவியாளர் தம்பி காட்டுநெமிலி பாக்கியராஜ் , இளம் வழக்கறிஞர்கள் பாரதி மோகன், அழகுராஜபாரதி, பிரியா, மற்றும் சபரி பாலபாண்டியன் , மற்றும் எழுவர் விடுதலையில் பங்காற்றிய வழக்கறிஞர் புகழேந்தி உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியையும், பெரும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
31 ஆண்டுகாலமாக தமிழக வீதியெங்கும் நடையாய் நடந்து, தனது வாழ்நாளையே முழுவதுமாக இதற்காய் அர்ப்பணித்து, எழுவர் விடுதலைக்காக நாளும் உழைத்து, தனது மகனுக்கு மட்டுமல்லாது மீதமிருக்கும் ஆறு பேருக்குமான விடுதலையையும் சாத்தியப்படுத்த துணைநின்ற வீரத்தாய் அற்புதம் அம்மாளை எண்ணிப் பெருமிதமும், பூரிப்பும் கொள்கிறேன்! இத்தருணத்தில், தனது மூன்று அண்ணன்களின் உயிர் காக்க தனது உயிரையே கொடையாகத் தந்த ஈகி தங்கை செங்கொடிக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.
மேலும், ஆறு பேரும் 32 ஆண்டுகள் கழித்து விடுதலை பெற்றிருக்கிற இத்தருணத்தில், இதே வழக்கில் முன்னதாக விடுதலை அடைந்தவர்களுக்கு வழங்கியதை போல, இவர்களின் விருப்பத்திற்கேற்ப வாழ வழிவகை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.