அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுநீரகம் மாயம்: அதிர்ச்சியில் நோயாளி
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், சிறுநீரகத்தில் இருந்த கற்களை உடைக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டபிறகு, நோயாளியின் சிறுநீரகமே காணாமல் போனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்ற நபர் அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி இருந்ததால், மற்றொரு மருத்துவரை நாடியுள்ளார். அவர் ஸ்கேன் செய்ய பரிந்துரைத்ததைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது இடது பக்க சிறுநீரகமே காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சுகாதாரத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடும் வயிற்றுவலியால் ஏப்ரல் 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகக் கூறி அன்றையே நாளே அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு ஏப்ரல் 17ஆம் தேதி வீடு திரும்பினேன்.
அக்டோபர் 29ஆம் தேதி திடீரென தீவிரமான வலி ஏற்பட்டது. மற்றொரு மருத்துவரை அணுகினேன். அங்கு எனது வயிற்றின் இடது பக்கத்தில் அறுவை சிகிச்சை தழும்பு இருந்ததைப் பார்த்து மருத்துவர் விசாரித்தார். நான் கல் அகற்ற அறுவை சிகிச்சை நடந்ததாகக் கூறினேன். ஆனால் சந்தேகம் அடைந்த மருத்துவர் ஸ்கேன் செய்யச் சொன்னார். ஸ்கேன் செய்து பார்த்ததில், எனது இடது பக்க சிறுநீரகமே காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. உடனடியாக தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டால், அது பற்றி யாருமே பதிலளிக்கவில்லை. உடனடியாக சுகாதாரத் துறையிடம் முறையிட்டேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்கிறார் சுரேஷ் சந்திரா.
அறுவை சிகிச்சை முடிந்து, வீட்டுக்கு அனுப்பும் வரை, என்னை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவேயில்லை. மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்தேன் என்கிறார் பரிதாபமாக.