தினமும் 2-3 கிலோ வசைகளை சாப்பிடுகிறேன்” கிண்டலடித்த பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி தென்மாநிலங்களில் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நலத்திடங்கள், விழாக்களில் பங்கேற்றார். பின்னர் நேற்று ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் சுற்றுப் பயணத்தை தொடர்ந்தார்.தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்த பாஜக தொண்டர்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது அவர் ஜாலியாக கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் பேசுகையில், ” இத்தனை பிசியாக வேலை பார்க்கும் நீங்கள் களைப்பு அடைய மாட்டீர்களா என பலர் என்னிடம் கேட்பதுண்டு. நான் தினமும் 2-3 கிலோ வசைகளை பலரிடம் இருந்தும் பெற்றுவருகிறேன். அவற்றை உண்டு அதன் மூலம் ஊட்டச்சத்து பெறுகிறேன். அந்த சக்தியால் மக்கள் நலன் பெற பாடுபடுகிறேன்.பலர் மோடியை திட்டுவதையே காலை, மாலை என எப்போதும் வேலையாக கொண்டுள்ளனர். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். நீங்களும் உங்கள் மீது வீசப்படும் வசைகளுக்கு கவலைப்படாமல் சிரித்து ஒதுங்கி உங்கள் வேலையை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.
என்னை திட்டுவதால் தெலங்கானா மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் என்னை நன்றாக திட்டுங்கள். அதேவேளை, தெலங்கனா மக்களை வஞ்சிக்க நினைத்தால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று பேசினார். பிரதமரின் இந்த கிண்டல் பேச்சு வைரலாகி வருகிறது.
தெலங்கானாவில் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ்வின் டிஆர்எஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பாஜகவுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் கடும் மோதல் நிலவி வருகிறது. சமீப காலமாக நடைபெற்ற தேர்தல்களில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது. இதன் காரணமாக கேசிஆர் கட்சியினர் பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.