நாற்பது வயதிலேயே முதுமை… டெல்லிவாசிகளை வாட்டி எடுக்கும் காற்று மாசு!

அளவு கடந்த மற்றும் தொடர் காற்று மாசால் டெல்லிவாசிகள் நாற்பது வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லிவாசிகள் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் பிரச்னைகளுள் மிக முக்கியமானது காற்று மாசு. செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இந்த கால கட்டத்தில் விவசாயக் கழிவுகள் அதிக அளவில் எரிக்கப்படுவதால் காற்றின் திசை மற்றும் வேகம் காரணமாக டெல்லியின் காற்று மிக மோசமாக மாசடைகிறது.

அனுமதிக்கும் அளவைவிட மிக அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகளை கொடுக்கிறது. சுவாசக் கோளாறு, நுரையீரல் பிரச்னைகள் ஏற்படுவதோடு சருமப் பிரச்னைகளையும் காற்று மாசு ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் தொடர்ந்து நச்சுக்காற்றை சுவாசிப்பதால் டெல்லி வாழ்மக்கள் நாற்பது வயதிலேயே முதுமை தோற்றதை்தை அடைந்து விடுகிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

மாசடைந்த காற்றில் நைட்ரஸ் ஆக்சைடு அதிக அளவில் இருப்பதால், அதை தொடர்ந்து சுவாசிக்கும்போது தோல் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறுகிறார் எய்ம்ஸ் மருத்துவமனையின் தோல் மருத்துவத்துறை தலைவர் கே.கே.வர்மா. இந்த நச்சுக் காற்றை சுவாசிப்பதால் அரிப்பு, அலர்ச்சி உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்து நச்சுக் காற்றை சுவாசிப்பதால் பலவேறு பாதிப்புகள் ஏற்பட்டு தோல் பளபளப்பு குறைந்து, படைகள் தோன்றி, சுருக்கங்கள் ஏற்பட்டு பொலிவிழந்து போகிறது. இதனால் நாற்பது வயதிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. நச்சு துகள்களால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து மற்ற நச்சுக்களின் அளவு அதிகரித்து விடும் எனவும், இதனால் பல நாள்பட்ட நோய்கள் ஏற்படும் எனவும் கூடுதலாக எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நாமும் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்கள் மருத்துவத் துறை நிபுணர்கள். குறிப்பாக முககவசம் அணிதல், அதிக நேரம் வெளியில் செலவிடாமல் இருப்பது, அதிக மாசடைந்த இடங்களாக அடையாளப்படுத்தப்படும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், தோல் வறண்டு போகாத வண்ணம் பதுகாத்தல் உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். அதோடு, மஞ்சள், துளசி உள்ளிட்ட மூலிகைப் பொருட்களை அடிக்கடி உட்கொள்வதும் நம்மை காற்று மாசால் ஏற்படும் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். காற்று மாசால் மட்டுமல்ல, ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், புற ஊதாக் கதிர்களாலும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. டெல்லி வாழ் மக்கள் பாவம் தான்..

Leave A Reply

Your email address will not be published.