கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? – வடக்கு ஆளுநரிடம் செல்வம் எம்.பி. கேள்வி.
“வடக்கு மாகாண ஆளுநரால் அவரின் செயலகத்தில் இன்று (15) நடத்தப்படும் கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? முப்படைகளையும் தனியாக அழைத்து கூட்டம் நடத்துவது நன்றாக இருக்காது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுள் ஒருவரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“இராணுவத்தினுடைய பிரச்சினையை மாத்திரமே தீர்ப்பதற்காக இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.
நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கூட்டம் என்றால் அதை நாம் பரிசீலிக்க முடியும். ஆனால், இந்தக் கூட்டம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் கூட்டமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளுநர் இந்தக் கூட்டத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டியிருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் முப்படைகளுக்கு காணிகளை வழங்கும் கூட்டமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் நடத்தக்கூடாது” – என்றார்.