‘பட்ஜட்’ பயத்தைக் காட்டி பதவி பெற ‘மொட்டு’ திட்டம்! – அசைந்து கொடுக்க ரணில் மறுப்பு.
“வரவு – செலவுத் திட்ட வாக்களிப்புக்கு முன் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும். இல்லையேல் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று அறியமுடிந்தது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்னும் அமைச்சுப் பதவி கிடைக்காமல் விரக்தியில் உள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், ஜனாதிபதியோ அசைவதாக இல்லை.
இன்று நியமனம், நாளை நியமனம் என்று செய்திகள் மட்டும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது இவர்களை ஆறுதல்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தரப்பு செய்யும் வேலை என்று அறியமுடிகின்றது.
கெபினட் அமைச்சுப் பதவிகள் கேட்டு 12 பேரின் பெயர்களை ‘மொட்டு’க் கட்சி ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளது. ஆனால், ஜனாதிபதிக்கு அந்த 12 பேருக்கும் கொடுப்பதற்கு விருப்பமில்லை. அதில் சிக்கலுக்குரியவர்களின் பெயர்களும் இருப்பதால் அவர் இழுத்தடிக்கின்றார்.
அதுபோக 12 போரையும் ‘மொட்டு’க் கட்சியில் இருந்தே நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லை. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் மேலும் சில கட்சிகளில் இருந்தும் சிலரை வளைத்துப் போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காய்நகர்த்தி வருகின்றார்.
அது சாத்தியமாகும் பட்சத்தில் அவர்களுக்கு கெபினட் அமைச்சுப் பதவிகள் கொடுக்க வேண்டி வரும். அதற்காகத்தான் இவ்வாறு இழுத்தடிக்கின்றார் என்று அவரது வட்டாரம் தெரிவிக்கின்றது.
ஆனால், இதை விரும்பாத ‘மொட்டு’க் கட்சியின் அந்த 12 பேரும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தத்தைப் பிரயோகித்து அந்தப் பதவிகளைப் பெறுவதற்கு வியூகம் ஒன்றை வகுத்துள்ளார்கள்.
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதுதான் அந்த வியூகம் என்று சொல்லப்படுகின்றது.
வரவு – செலவுத் திட்ட வாக்களிப்புக்கு முன் அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் எதிர்த்தே வாக்களிப்பார்கள் என்று அவர்களது வட்டாரம் தெரிவிக்கின்றது.