மயக்க மருந்து கொடுக்காமல் கருத்தடை அறுவை சிகிச்சை… பீகாரில் பகீர் சம்பவம்..
பீகாரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வந்த 24 பெண்களுக்கு மயக்க மருந்தே கொடுக்காமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள 2 அரசு மருத்துவ நிலையங்களில் பெண்கள் பலர் கருத்தடை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது வழக்கமாக வழங்கப்பட வேண்டிய மயக்க மருந்து ஏதும் கொடுக்கப்படாமல் விழிப்பில் இருந்த நிலையிலேயே 24 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சையின்போது வலி தாங்க முடியாமல் சிலர் அலறித் துடித்ததாகவும் அப்போது 4 பேர் சேர்ந்து அவர்கள் கை மற்றும் கால்களை பிடித்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மயக்க மருந்து முறைப்படி வழங்கப்பட்டதாகவும் ஆனால் சிலருக்கு அது சரியாக செயல்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ நிர்வாகத்திடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதேபோல் அராரியா மாவட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு 53 பெண்களுக்கு 2 மணி நேரத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். ஒரு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய என்.ஜி.ஓக்களுக்கு அரசு, ரூ.2100 கொடுக்கிறது. இதற்காக அவர்கள் பெண்களுக்கு சரியான முறையில் செய்யாமல் அவசரகதியாக சிகிச்சை செய்தாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த சம்பவத்தில் மயக்க மருந்து கொடுக்காமல் சிகிச்சை மேற்கொண்டதற்காக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.