சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை: உத்தரவு வாபஸ்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வருடாந்திர மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், பக்தா்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்காக கேரள அரசு சார்பிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்லவும், தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இந்நிலையில் சபரிமலையில் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அறிவுறுத்தல் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாகக் கூறி இதனை கேரள அரசு வாபஸ் பெற்றுள்ளது.
சபரிமலையில் 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புத்தகத்தில் தவறாக அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018ல் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.