ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மத்திய அரசு
2016 நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ரிசர்வ் வங்கி சட்டம் 1934 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க, சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார கொள்கை முடிவு என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மிகவும் அதிகரித்த நேரத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணம், கள்ள நோட்டு, வரி ஏய்ப்பு, தீவிரவாதத்துக்கு நிதி அளித்தல் உள்ளிட்டவற்றை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.