இன்று ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி ஆரம்பம்!
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் தோறும் நடத்தும் கார்த்திகை மாத மலர்க் கண்காட்சி இன்று (18) தொடங்குகின்றது.
அது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
“வடக்கு மாகாண சபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகையில் மரநடுகை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வருவதோடு, மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடத்தி வருகின்றது.
இவ்வருடமும் மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் வகையில் இன்று 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர் முற்றம் காட்சித்திடலில் பிற்பகல் 3 மணிக்கு கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி திறந்து வைக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன் கலந்துகொள்கின்றார்.
சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் ம. செல்வின் இரேனியஸும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் ச. ரவியும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இக்கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணிதொடக்கம் இரவு 7.30 மணி வரை நடைபெறும்” – என்றுள்ளது.