இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
டி20 உலகக் கோப்பைப் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் யாரும் எதிர்பாராதவகையில் 1
4ஆவது ஓவரின்போதே 4 விக்கெட் இழப்புக்கு 66 என்கிற நிலைமையில் இருந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பட்லரும் டேவிட் மலானும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். மலானுடன் 50 ரன்கள் கூட்டணி அமைத்து 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பட்லர்.
மலான் 64 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆனால் 37ஆவது ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 என்கிற நிலைமையை அடைந்தது இங்கிலாந்து. எனினும் மற்றொரு முனையில் பொறுப்பாக ஆடிய மலான், 107 பந்துகளில் சதமெடுத்தார். கடைசியில் அணிக்கு நல்ல ஸ்கோரை வழங்கிவிட்டு 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மலான்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. டேவிட் வில்லி ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ், ஆடாம் ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின் 69 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 பந்துகளில் 86 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி அரைசதம் கடக்க, மறுமுனையில் மார்னஸ் லபுசாக்னே, அலெக்ஸ் கேரி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களைச் சேர்த்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.