கூட்டமைப்பின் அழைப்பை வரவேற்கின்றார் கஜேந்திரகுமார்! – சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் முன்வைப்பது மிக நல்லது.
சமஷ்டியை ‘மீண்டும் நிகழ்ச்சி நிரலில்’ வைப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தலைமை தாங்கும் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.
‘த இந்து’ பத்திரிகையின் கொழும்புச் செய்தியாளர் மீரா ஶ்ரீநிவாசனுக்குத் தாம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.
இலங்கை நிலைமை தொடர்பாக மீரா ஶ்ரீநிவாசன் செய்திக் கட்டுரை ஒன்றை தமது பத்திரிகையில் இன்று வரைந்துள்ளார். அதிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையின் முழு வடிவம் வருமாறு:-
நவம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் தமிழ்க் கட்சிகளை இந்த வாரம் கலந்துரையாடலுக்கு அழைத்தார். அத்தோடு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள தீவு நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அவர்களின் (தமிழர்களின்) நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்தார். எனினும், இந்தக் கூட்டத்திற்கான திகதியை இன்னும் பெறாத நிலையில் தமிழ் அரசியல்வாதிகள், இந்த உத்தேச சந்திப்புத் தொடர்பில் மிகவும் சந்தேகம் கொண்டுள்ளனர்.
இலங்கைத் தலைவர்கள் பலர் கடந்த காலங்களில் தீவின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், அவை எவையும் நிறைவேற்றப்படாமல் தவறாமல் தோல்வியில் முடிந்தன.
மிக சமீபத்தில், 2015 மற்றும் 2019 க்கு இடையில் ஆட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம், புதிய அரசமைப்பை உருவாக்க முயற்சித்தது. ஆனால், பணியை முடிக்கவில்லை. இது அவர்களின் அரசை ஆதரித்த தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது 75 ஆவது சுதந்திர தினத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு முனைப்புடன் முயற்சிப்போம். நம் நாட்டின் விஷயங்களில் மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை. எங்களுடைய பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும்” என்று ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகப்பெரிய குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரது அழைப்பை வரவேற்றதுடன், “முழுமையாக ஒத்துழைக்க” தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், 89 வயதான நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன், பல தசாப்தங்களாக பல்வேறு சிங்களத் தலைவர்களுடன் அரசமைப்புத் தீர்வொன்றை மேற்கொள்ள முயற்சித்து வரும் நிலையில், ஜனாதிபதியின் உறுதிமொழி இம்முறை உண்மையானதாக இருக்கும் என நம்புகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சி அரசமைப்பை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கைத் தலைமை தயாராக வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னதாகத் தெரிவித்துள்ளார்.
சமஷ்டி மீது கவனம்
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், “ஒரு கூட்டாட்சி அமைப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்கான நோக்கத்தை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்வதால், இந்த வாரம் கலந்துரையாடலுக்கு அவர்களை (ஏனைய கட்சிகளை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைத்துள்ளது” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
திட்டமிட்டபடி தமிழ்க் கட்சிகளின் கூட்டம் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “தீவிரத்தன்மை” குறித்து சந்தேகங்களை எழுப்பும் அதேவேளையில், “நாங்கள் அதை (தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தை) நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்
சுமந்திரன் அதிருப்தி
நவம்பர் 14ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேநீர் விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மேற்படி சந்திப்பு (தமிழ்க் கட்சிகளுடனான) சந்திப்புக் குறித்துத் தாம் நேரில் கேட்டார் என சுமந்திரன் கூறினார்.
“ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் வருவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார். அவர் அறிவித்த இந்த வாரச் சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, வேண்டுமானால் இந்த வாரம் சந்திக்கலாம் என்றார். இது [அவரது பதில்கள்] எதையும் தீவிரமாக செய்ய தீவிரத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது” என்றார் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன்.
அதிக அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வின் தேவை இலங்கையில் இந்திய ஈடுபாட்டின் மையமாகவும் உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான தமது கடப்பாடுகள் குறித்து இலங்கையினால் “அளக்கப்படக் கூடிய முன்னேற்றம் இன்மை குறித்து கவலையுடன்” இந்திய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் அதன் போதாமைகளை அடிக்கடி சுட்டிக்காட்டினாலும், இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை “முழுமையாக அமுல்படுத்த” இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
கஜேந்திரகுமார் கருத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தலைமை தாங்கும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஷ்டியை “மீண்டும் நிகழ்ச்சி நிரலில்” வைப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்துக்கு அண்மையில் அழைத்தது வரவேற்கத்தக்கது என்றார்.
அவரது பார்வையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தைக் கூட்டினாலும், சமஷ்டி அரசமைப்பின் அடிப்படையில் விவாதத்தை நடத்துவதற்கு அவர் வெளிப்படையாக உறுதியளிக்காத வரையில், “ஈடுபடுவதில் அர்த்தமில்லை” என்கிறார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியுடனான உரையாடலை நினைவுகூர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி “சமஷ்டியை நிராகரித்தார்” என்றார். “அப்படியானால், நாம் அவருடன் என்ன பேசப் போகிறோம்? அவர் தனது அரசு சட்டபூர்வமானது, நிலையானது, மேலும் அவர் அனைத்து நடிகர்களுடனும் பேசுகிறார் என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறார். நாங்கள் பேச்சு மேசையில் இருப்பது அவருக்குத் தேவை,” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ‘த இந்து’விடம் தெரிவித்தார்.
“அவர் [ஜனாதிபதி] தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உறுதிமொழியில் நேர்மையாக இருந்தால், சமஷ்டி என்பது இந்தப் பேச்சுக்களுக்கு முன் நிபந்தனையாக இருக்க வேண்டும். சிங்கள மக்களிடம் பொய் சொல்லாமல், அவர் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்றார்.
தமிழ்க் கட்சிகளுக்கு ஜனாதிபதியின் அழைப்புக் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மகிழ்ச்சியடையவில்லை என்றாலும், இந்த ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி “இலங்கைக்கு ஆன்மாவைத் தேடுவதற்கான உண்மையான வாய்ப்பை” வழங்கியுள்ளது என்கிறார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் கவலைகளைத் தீர்க்கமாக நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.
.“தெற்கு மக்கள் ஏமாற்றமடைந்தனர் என உணர்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் தங்கள் பெயரில் போர் புரிந்ததையும், அவர்களின் பெயரில் இனவாதக் கொள்கைகளை கடைப்பிடிப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். ஒரு நாடாக நாம் இப்போது ஒன்றாகச் செயற்பட முடிந்தால், நாம் நிச்சயமாக விடயங்களைச் சரிசெய்ய முடியும்” என்று அவர் கூறினார்.