‘தமிழ்நாடு சிவமயமானது ..காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
தமிழ்நாடு சிவமயமானது என காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இணையமைச்சர் எல்.முருகன், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் காசி என நிகழ்ச்சியில் பேச்சை தொடங்கினார். காசி நகரம் பழைமை வாய்ந்தது சிறப்பு வாய்ந்தது, அதேபோல் தமிழ்நாடும் பழைமை வாய்ந்தது கலச்சார பெருமை வாய்ந்தது என்றும் காசி மக்களுக்கும் தமிழ்நாட்டும் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் பன்னெடுங்காலமாக பிணைப்பு உள்ளது காசி பட்டும், காஞ்சி பட்டும் சிறந்து விளங்குகின்றன. மேலும் காசியும், தமிழ்நாடும் பல யுக புருஷர்கள் உதித்த பூமி என்றும் தமிழக திருமண வைபவங்களில் காசி யாத்திரை வழக்கம் உண்டு என்றும் காசியும் தமிழ்நாடு இரண்டும் சிவமயம் சக்திமயமானது என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி காசிக்கு துளசிதாசர் என்றால் தமிழகத்திற்கு திருவள்ளுவர் என்று பிரதமர் கூறினார்.