நாடு திரும்பினார் ‘கப்புட்டு காக்கா’ பஸில்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் ஒன்றரை மாதங்களைக் கழித்த பின்னர் இன்று காலை 8.30 மணியளவில் நாடு திரும்பினார்.
மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையடுத்துப் பதவிகளிலிருந்து ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் இரட்டைக் குடியுரிமையுள்ள பஸில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் பஸில் ராஜபக்சவின் வருகையைத் தொடர்ந்து எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை விரைவில் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பது பஸில் ராஜபக்சவின் கடமையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கூறியுள்ளார்.
இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ச அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது பஸில் ராஜபக்ச ‘கப்புட்டு காக்கா’ என்று மக்களால் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.