சத்தம் சந்தடியின்றி கொழும்பில் களமிறங்கினார் அஜித் டோவல்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இரண்டு நாள் விஜயமாக கொழும்புக்குச் சத்தம் சந்தடியின்றி வந்து சேர்ந்திருக்கிறார் என செய்தி வட்டாரங்கள் சில தகவல் வெளியிட்டன.
எனினும், இந்தியத் தூதரகமோ, கொழும்பு அரசு வட்டாரங்களோ இந்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்தவில்லை.
இந்தியப் பிரதமர் மோடியின் விசேட செய்தியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று கொழும்பு வந்திருக்கிறார் எனக் கூறப்பட்டது.
கொழும்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து டோவலுடன் தொலைபேசி உரையாடலில் இருந்தார் என்றும், ரணிலின் அரசுக்காகப் பரிந்து பல விடயங்களை கோட்டாபய இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் பேசி வந்தார் என்றும், கடந்த வாரத்தில் இரண்டு நாள் பயணமாக சத்தம் சந்தடியின்றி கொழும்பு வந்து திரும்பிய டோவலின் மகன் ஷாருயா டோவலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார் என்றும், அதன் தொடர்ச்சியாகவே டோவல் தற்போது கொழும்பு வந்துள்ளார் என்றும் கூறப்பட்டது.
அவர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இந்தியப் பிரதமரை அவர் நேரடியாகச் சந்திப்பதற்கான இணக்க ஒழுங்கு ஒன்று இன்னமும் எட்டப்படவில்லை என்ற பின்புலத்தில் டோவலின் வருகை முக்கியமானதாகக் கவனிக்கப்படுவதாக அந்த செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.