பட்டினியில் வாடுகின்றது மலையகத் தொழிலாளர்களின் குடும்பம்!
“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டுக்குத் தேவையான வருமானத்தை அந்நியச் செலவாணியைத் தொடர்ந்து பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டை பட்டினியில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் பட்டினியில் வாடுகின்றனர். இதுவா பொருளாதார நீதி?”
இவ்வாறு மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆலோசகரான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மலையக மக்கள் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு 200 வருட நிறைவைத் தமதாக்கவிருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களின் நிறைவான மகிழ்வை அரசு 2023 ஆம் வருட வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் முன்வைக்காதது மட்டுமல்ல அது தொடர்பாக வரவு – செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி எதையும் தெரிவிக்காமல் விட்டது மலையக மக்கள் தொடர்பில் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைத் தெளிவாக்குகின்றது.
ஜனாதிபதி 2048 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவுறுகையில் நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என 2023 வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டவர் 2023 ஆம் ஆண்டு மலையக மக்கள் உயிர் தியாகத்தோடு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி இரு நூற்றாண்டுகளை நிறைவு செய்கின்றனர்; இவர்களின் வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட மறந்தது பேரினவாத அரசியலின் அரச முகத்தின் வெளிப்பாடு எனலாம்.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டுக்குத் தேவையான வருமானத்தை அந்நியச் செலவாணியைத் தொடர்ந்து பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டைப் பட்டினியில் இருந்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் பட்டினியில் வாடுகின்றனர். இதுவா பொருளாதார நீதி?
நாட்டில் வறுமை 26 வீதமாக உயர்ந்திருக்கையில் தோட்டத்துறையிலோ 53 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகின்றது. அதேநேரம் நாட்டில் உணவின்மை நகரத்தில் 43 வீதமாகவும், கிராமத்தில் 33 வீதமாகவும் உள்ள நிலையில் பெருந்தோட்டத்துறையில் 51 வீத மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டுடிருப்பதன் காரணம் பிழையான அபிவிருத்தித் திட்டமும் பொய்யான வாக்குறுதிகளும் மட்டுமல்ல இம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிட்ட பொருளாதார ரீதியிலான இன அழிப்புமாகும். இம்மக்களின் வாக்குகளை அள்ளிக் கொண்டவர்கள் நீண்டகாலமாக இம்மக்களை வாழவிடவில்லை என்பதே உண்மை.
மலைய மக்கள் 200 வருட நிறைவை 2023 ஆம் ஆண்டில் தற்போதைய நாட்டின் பொருளாதாரம் காரணமாக இவர்கள் மத்தியில் விரக்தி மனநிலையினால் தற்கொலை வீதம் அதிகரிக்கலாம், குடும்ப வன்முறைகள், பிளவுகள் அதிகரிக்கலாம். இத்தகை சிதைவினையா மலையக மக்களுக்குப் பரிசாக அளிக்க ஆயத்தமாக உள்ளனர்.
அரச துறைக்குச் சொந்தமான பெருந்தோட்டத்துறை வெற்று காணிகள் குத்தகைக்கு கொடுக்கப்படும் என வரவு – செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி கூறியுள்ளார். அது யாருக்கு கொடுக்கப்படும் என்று கூறவில்லை. அதேபோன்று 22 கம்பனிகளுக்கு சொந்தமான பெருந்தோட்டங்களிலும் வெற்று காணிகள் உள்ளன. அது தொடர்பாக ஒன்றும் கூறவில்லை.
பெருந்தோட்டத்துறையில் 32 ஆயிரம் ஹொக்டயர் வெற்று காணிகள் இருப்பதாகவும், அதனைப் பெருங்தோட்டத்துறை இளைஞர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் குறிப்பிட்டார். அதனை அவர்களுக்குக் கொடுக்க முன்வரவில்லை.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது பெருந்தோட்டத்துறையில் வெற்றுக் காணிகளில் மாற்று ஏற்றுமதி பயிர்ச்செய்கையாக மரக்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யப்படும் எனக் குறிப்பிட்டார். அவையெல்லாம் பொய்யான வாக்குறுதிகளாகவே அமைந்தன. இதன் பிரதி பலனையே தற்போது அனுபவித்து வருகின்றோம்.
மலையகம் எனத் தாம் உருவாக்கிய தேசத்தில் 200 ஆண்டு காலமாக நில உரிமையற்ற மக்களாகவே வாழ வைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு செய்துள்ள அரசியல் அநீதி மட்டுமல்ல பொருளாதார அநீதியுமாகும். இதிலிருந்து இவர்கள் மீளவும் இந்த நாட்டின் பிரஜைகளுக்குரிய கௌரவத்தை உரித்தாக்கவும் மலைப் பிரதேசங்களில் அவர்கள் தற்போது வாழுகின்ற வீட்டையும், பயிர் செய்யும் காணிகளையும், அங்கு இருக்கின்ற வெற்றுக் காணிகளையும் அவர்களுக்கே சொந்தமாக்கி இந்நாட்டின் கௌரவ பிரஜைகள் ஆக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு இருநூற்றாண்டு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதாகவும் அமையும்” – என்றுள்ளது.