மங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் கோவை சென்று வந்ததாரா? வெளியான பகீர் தகவல்
மங்களூரு நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான இருந்த ஆட்டோ பயணி கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மங்களூரு அருகே உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த ஆட்டோவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆட்டோ முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில், ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குக்கரில் பேட்டரி மற்றும் பயங்கரவாதிகள் உருவாக்கிய சர்க்யூட் பாக்ஸ் இருந்தது தெரியவந்தது. மேலும் இது எல்இடி வகை வெடிகுண்டு என தெரிய வந்தது. இந்தநிலையில் ஆட்டோ வெடித்தது தீ விபத்து அல்ல என்றும் அது பயங்கரவாத தாக்குதல் எனவும், கர்நாடகா மாநில டிஜிபி பிரவீன் சூட் டிவிட்டரில் பதிவிட்டார்.
இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோவில் பயணித்த நபர் தான் தாக்குதலில் ஈடுபட்டவர் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை அடையாளம் கண்டு, மைசூரில் அவர் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அதில் வெடி பொருட்கள், மற்றும் வெடிமருந்து செய்ய தேவையான ரசாயன பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் போலி ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தாக்குதலில் ஈடுபட்ட நபர், தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் அவரது பெயரை பிரேம்ராஜ் என்று கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிரவாதி பயன்படுத்திய போலி ஆதார் எண் ஹீப்பள்ளி நகரில் வசித்து வரும் பிரேம் ராஜ் ஹுடகி என்பவரின் ஆதார் எண் என்பது தெரியவந்தது. ரயில்வே ஊழியராக பணியாற்றும் பிரேம் ராஜ் சில மாதங்களுக்கு முன் பஸ் பயணத்தின் போது தனது ஆதார் அட்டையை தொலைத்து விட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கர்நாடக காவல்துறையுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்கினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் பேருந்துகள், வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.