கடவுளே இனி முடியாது! மூச்சு முட்டுகிறது.. மொத்த குடும்பமும் தற்கொலை… சிக்கிய கடிதம்

இந்தியாவில் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மனதை உருகவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பறிபோன குடும்ப நிம்மதி
உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஸ்ரீவஸ்தவா (45). இவருக்கு மன்யா (16) மற்றும் மன்வி (14) என்ற இரு மகள்கள் இருந்தனர். ஜிதேந்திரா கடந்த 1999ல் நடந்த கார் விபத்தில் தனது ஒரு காலை இழந்தார்.
அவரின் மனைவி சிம்மி இரண்டாண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் உயிரிழந்தார். மனைவி இறப்பிற்கு பிறகு ஜிதேந்திரா வீட்டிலேயே டைலரிங் பணி செய்து வந்தார், கடந்த இரண்டாண்டுகளாக குடும்பத்தினர் மிகுந்த பண நெருக்கடியில் இருந்தனர்.
இறுதிச்சடங்கு
மகள்களின் பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் ஜிதேந்திரா இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மூன்று பேரும் வீட்டில் தனித்தனி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இரவு நேர செக்யூரிட்டி பணி முடிந்து வீடு திரும்பிய ஜிதேந்திராவின் தந்தை ஓம் பிரகாஷ் மகன், பேத்திகளின் சடலத்தை பார்த்து அதிர்ந்து போய் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து பொலிசார் சடலங்களை கைப்பற்றினர். இவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 5 பேர் கூட வரவில்லை, பின்னர் பொலிசாரே இறுதிச்சடங்குகளை ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.
உருக்கமான வார்த்தைகள்
மன்யா தனது டைரியில் எழுதியிருந்த வார்த்தைகள் உருக்கமாக இருந்தது. அதில், என் அம்மாவையும் எடுத்து கொண்டாய், என் தந்தை எங்களுக்காக போராடினார்.
என் வாழ்க்கை ஒரு சாபம், வலியும் வேதனையும் நிறைந்தது. என் குடும்பத்தை அழிக்க நினைப்பவர்கள் யார்? ஆம் அந்த நபர்கள் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் ஏன் எங்களை மகிழ்ச்சியாகப் பார்க்க விரும்பவில்லை, கடவுளே என்னால் இனி எழுத முடியாது, எனக்கு மூச்சு முட்டுகிறது என எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.