ஷ்ரத்தா கொலை: 2 கேள்விகளுக்கு மட்டும் மாற்றி மாற்றி பதிலளிக்கும் அஃப்தாப்
புது தில்லியில் ஷ்ரத்தா வால்கர் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருக்கும் அஃப்தாப் சொல்லும் எதையும் வைத்து எந்த முடிவுக்கும் வர தில்லி காவல்துறையினர் தயாராக இல்லை.
விசாரணை அதிகாரிகள், ஷ்ரத்தா கொலை தொடர்பாக அஃதாபிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் உடனே ஒரு கதையைச் சொல்வது போல பேசத் தொடங்கிவிடுகிறார். எப்படி இவ்வளவு துல்லியமாக இதைச் சொல்கிறாய் என்று அதிகாரிகள் கேட்டால், தான் கைது செய்யப்பட்டது முதல் இதேக் கேள்வியைத்தான் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பதில் சொல்லி சொல்லி பழகிவிட்டது, எங்கே கண்ணீரும், குற்ற உணர்ச்சியும் வர முடியும் என்று குறிப்பிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஷ்ரத்தாவைக் கொன்றது ஏன் என்பது குறித்த கேள்விக்கும், ஷ்ரத்தாவின் உடல்பாகங்கள் எங்கெங்கு வீசப்பட்டன என்ற கேள்விகளுக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பதில்களை அளித்துள்ளார் அஃப்தாப்.
அஃப்தாப்பிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகையில், ஷ்ரத்தா மீது இருந்த ஏதோ ஒரு கோபம் அல்லது ஆத்திரம் அல்லது அதிருப்திதான் அஃப்தாபைக் கொலை செய்யத் தூண்டியிருக்கிறது.
அவருடன் எடுத்த மிகப்பெரிய புகைப்படங்களையும் அஃப்தாப் எரித்துள்ளார். அந்தக் கோபத்தில்தான், ஷ்ரத்தாவின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் தனது கணக்குக்கு மாற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும், தன்னிடமிருந்து ஷ்ரத்தா பணத்தைப் பறித்துக் கொண்டு திருப்பிக் கொடுக்கவில்லை என்றும், அதனால்தான் அவரைக் கொன்ற பிறகு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் அஃப்தாப் கூறியுள்ளார்.
ஆனால், அஃப்தாப் சொல்லும் எதையும் நம்ப காவல்துறை தயாராக இல்லை. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரைய்ன் மேப்பிங் மற்றும் போலிகிராஃப் சோதனை உள்ளிட்டவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுளள்து.
அஃப்தாப், ஏராளமான டேட்டிங் செயலிகளில் இணைந்திருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் காவல்துறையினர்.