குக்கர் வெடிகுண்டுடன் போட்டோ க்ளிக்.. ஆட்டோ வெடி விபத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!
மங்களூரு ஆட்டோ வெடிப்பு குற்றவாளி ஷாரிக், தமிழ்நாட்டின் 3 நகரங்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக், தமிழ்நாட்டில் சில நாட்கள் தங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது. கோவையில் 3 நாட்களும், மதுரையில் 2 நாட்களும், கன்னியாகுமரியில் ஒரு நாளும், கேரள மாநிலத்தில் 2 நாட்களும் அவர் தங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 3 மாவட்டங்களிலும் யார், யாரையெல்லாம் ஷாரிக் சந்தித்து பேசினார் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 மாவட்டங்களிலும் முகாமிட்டுள்ளனர். உதகையைச் சேர்ந்த ஆசிரியரிடம் விசாரணை நீடிக்கும் நிலையில் குற்றவாளியின் செல்போன் எண் வாங்கித் தர உதவினாரா என விசாரிக்க மங்களூரு கோவை வந்துள்ளனர்.
மேலும் நாகர்கோவிலை சேர்ந்த அஜீம் ரகுமானிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, ஷாரிக்கின் வீட்டில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், தங்கும் விடுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.