ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஆட்சியில் தமிழர்கள் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு கிட்டும்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு வடக்கு மக்கள் தயார் இல்லை. எனது ஆட்சியின் கீழ் வடக்கு மக்களின் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
“வடக்கு மக்கள் மீது ஜனாதிபதிக்கு உண்மையான கரிசனை இருந்தால் அவர் வவுனியாவில் வைத்து வழங்கிய வாக்குறுதிகளை எதிர்வரும் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு முன்னர் நிறைவேற்றிக் காட்டட்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சவால் விடுத்தார்.
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும், 75ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை கடந்த சனிக்கிழமை வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு மாகாணத்துக்கு நான் விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். அங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லவுள்ளேன். வடக்கு மக்கள் படும் இன்னல்களை நான் நேரில் ஆராயவுள்ளேன். ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியமைத்தால் அவர்களின் பிரச்சினைகளுக்கு நான் விரைந்து தீர்வு காண்பேன்.
வடக்கு மக்களுக்கு நான் என்றுமே நன்றியுடையனவாக இருக்கின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளை எனக்கு அவர்கள் வழங்கினார்கள்” – என்றார்.