பதவி ஆசை எனக்கு இல்லை! தேசியப் பட்டியல் எம்.பி. விவாகரம் தொடர்பில் மனம் திறந்தார் மாவை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் எம்.பியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா பெற்றுக்கொள்ள அன்று தொடக்கம் இன்று வரை கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்று வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் அவர் மனந்திறந்து பதிலளித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்ததாவது:-
“கட்சிக்குள் இருந்த தவறான நடவடிக்கைகள் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வெற்றி பெற முடியாது போனது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை எனக்குப் பெற்றுக்கொடுக்க சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் என்னிடம் பேச்சு நடத்தினர். ஆனால், எமக்குப் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. அதனால் பெண் ஒருவருக்கு இந்தத் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் சென்று சந்தித்த போது கட்சியில் பெரும்பான்மையானவர்கள் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை எனக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தனர்.
என்றாலும் இது தொடர்பில் முடிவெடுக்க மீண்டும் சம்பந்தனைச் சந்திக்கச் செல்வதற்கு முதல்நாள் கட்சியின் செயலாளரால் கையொப்பமிட்டு அம்பாறைக்குத் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை வழங்க வேண்டுமென்ற அறிவிப்பு வெளியானது.
உண்மையில் தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை அம்பாறைக்கு வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. என்றாலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் அந்த முடிவு எடுக்கப்பட்டது தவறான ஒரு விடயமாகும்.
பதவிகளுக்காக நான் ஒருபோதும் ஆசைப்பட்டதும் இல்லை; அடிபணியவும் இல்லை; வாதாடவும் இல்லை. 11 தடவைகளுக்கு மேல் என்னை கைதுசெய்துள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலும் இருந்துள்ளேன்.
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக என்னை நிறுத்த வேண்டுமென்று அனைவரும் ஓரணியில் இருந்த போதும் அந்தச் சந்தர்ப்பத்தை எமது இனவிடுதலைக்காக நான் விட்டுக்கொடுத்திருந்தேன். ஆகவே, எனக்குப் பதவிகள் என்பது எப்போதும் முக்கியமாக இருந்ததில்லை. ஆனால், எனக்கு வரும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நான் எமது மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டுதான் இருக்கின்றேன்” – என்றார்.