ஜல்லிக்கட்டு வழக்கு: பாரம்பரிய விளையாட்டை ஒழிக்கவே பீட்டா மனு- தமிழக அரசு
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது எனவும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை ஒழிக்கவே பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில், 102 பக்கங்கள் அடங்கிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், எந்த தீங்குமின்றி வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சார விளையாட்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் கொண்டு வரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்றும், அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21ன் கீழ், விலங்குகளுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும் கிடையாது என்றும், ஆனால் விலங்குகளுக்கு அடிப்படை உரிமை உள்ளதாக பழைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ரத்து செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய விளையாட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே பீட்டா அமைப்பு இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.