மங்களூர் வெடி விபத்து: “ஈஷா மையத்தில் அவனை பார்த்தேன்” ஆட்டோ ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்
மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கோவை ஈஷா யோகா மையத்தில் பார்த்ததாக கூறிய ஆட்டோ ஓட்டுனரிடம், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மங்களூருவில் ஆட்டோ வெடித்த சம்பவத்தில் காயமடைந்த ஷாரிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தீவிரவாத தாக்குதல் என்றும், ஷாரிக் வீட்டில் இருந்து வெடிபொருள் தயாரிக்கும் பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷாரிக், வாட்ஸ்அப் டிபியில் ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் படத்தை வைத்திருந்தது 2 நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில், தீபாவளி தினத்தன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மங்களூரு தாக்குதல் குற்றவாளியை பார்த்ததாக கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததாகவும், அவருடன் மேலும் இருவர் இருந்ததாகவும் ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவை மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆனந்தன் அழைக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 24ம் தேதி ஷாரிக்கின் செல்போன் சிக்னல் கர்நாடகாவில் இருந்ததாக கூறப்படும் நிலையில், அன்றைய தினம் அவரை ஈஷா யோக மையத்தில் பார்த்ததாக ஆட்டோ ஓட்டுனர் கூறியுள்ளார். எனவே 24ம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.