”600 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு..” அறிக்கை தந்த காவல்துறை.. ஷாக்கான நீதிமன்றம்!
பறிமுதல் செய்து வைத்திருந்த 600 கிலோ கஞ்சாக்களை எலிகள் திண்றுவிட்டதாக அதிர்ச்சி வாக்குமூலத்தை உத்தரப் பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்க பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறை கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆனால், நீதிமன்றம் இதை ஏற்க முடியாது பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவையும் நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரா போலீசார் நீதிமன்றத்தில் அளித்த பதில் தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மதுரா காவல்நிலைய ஸ்டோர் ரூம்மில் எலித்தொல்லை ஜாஸ்தியாக இருப்பதாகவும், அந்த எலிக்கள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் சாப்பிட்டு விட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர். இதேபோல் 2017ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை பறிமுதல் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து காலி செய்துவிட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.