கோகுல் ராஜ் கொலை வழக்கில் மீண்டும் பிறழ்சாட்சி சொன்ன சுவாதி.. கடைசி வாய்ப்பு கொடுத்த நீதிபதி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று ஆஜரான சுவாதி மீண்டும் பிறழ்சாட்சியம் அளித்ததால், அவர் உண்மையை ஒத்துக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையின் போது, நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதில் நீதிபதிகள் காட்டிய வீடியோவில் இருப்பது தான் இல்லை என தெரிவித்தார். மேலும் கோகுல்ராஜ் உறவினருடன் செல்போனில் பேசிய ஆடியோவை காட்டி கேட்டபோதும் அது தனது குரல் இல்லை என மறுத்துள்ளார். ஏற்கனவே 2018ஆம் ஆண்டு பிறழ்சாட்சியம் அளித்த நிலையில் மீண்டும் பிறழ்சாட்சியம் அளித்துள்ளார் சுவாதி.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, “நீங்கள் பொய் சொன்னால் சிறைக்கு செல்ல நேரிடும். இந்த வழக்கு மிகவும் முக்கியமானது.
நீதிமன்றத்திற்கு, நீதிபதிகளுக்கு ஒன்றுமே தெரியாது என நினைக்கிறீர்களா? கடைசியில் சத்தியம் ஜெயிக்கும். உங்களை பார்த்தே உங்களுக்கு தெரியாது என்றால் என்ன செய்வது?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய். சாதி, மதங்களை கடந்து செல்ல வேண்டும் நீதிபதிகள். மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, “உண்மையை சொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். உங்கள் மனசாட்சியே உங்களை சுடும். உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருந்தால் கூறலாம்.” என தெரிவித்தார்.
சுவாதிக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.