புதுப் பொலிவுடன் மீண்டும் திரைகளில் தோன்றும் ‘பாபா‘.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய மற்றும் ரஜினியே கதை, திரைக்கதை எழுதித் தயாரித்திருந்த ‘பாபா‘ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, கூடுதல் இசைப் பொலிவு மற்றும் பாடல்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு படம் திரைக்குவரத் தயாராகியுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு காட்சியமைப்பினது கோணங்களை மாற்றி, வர்ண மேம்படுத்தல் செய்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் படம் தயாராகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பாபா‘ படத்தின் அனைத்துப் பாடல்களும் இரசிகர்களைக் கவர்ந்திருந்த நிலையில், அந்தப் பாடல்கள் டொல்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு இசை இணைப்புச் செய்யப்பட்டுள்ளன.
‘அண்ணாாமலை‘, ‘வீரா‘ மற்றும் ‘பாட்ஷா‘ படங்களின் தொடர் வெற்றியை அடுத்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினியுடன் நான்காவது படமாக இயக்கியிருந்த ‘பாபா‘ படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
இதில், கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்ததுடன் கவுண்டமணி, டெல்லி கணேஷ், ரியாஸ்கான், எம்.என்.நம்பியார், சுஜாதா, ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி மற்றும் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ‘பாபா‘ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது. வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.