தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் நடந்தது என்ன? – சுமந்திரன் விளக்கம்.
“தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துவது எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்றும், எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள் அந்தத் தீர்வு வழங்கப்பட்டு ‘ஒரு தாய் மக்களாக’ இலங்கையர்கள் சுதந்திரதினத்தைக் கொண்டாடுவார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் மீண்டும் தெரிவித்துவரும் நிலையில், தீர்வை நோக்கிய பயணத்தில் ஜனாதிபதியிடம் என்னென்ன விடயங்களை வலியுறுத்துவது என்பது தொடர்பில் பேச்சு நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை கூடினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்தினர், சி.சிறீதரன், எஸ்.வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.
“நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அதிகாரப் பகிர்வு சம்பந்தமான அரசமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் நின்று நேற்று எடுத்துள்ளன. இந்தத் தீர்மானங்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளின் திட்டவட்ட முடிவுகளாக ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்படும்” என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதியுடனான பேச்சு நடைபெறும் வரையில் இடையிடையே ‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வு’ தொடர்பில் ஒன்றுகூடி மேலதிக தீர்மானங்களை மேற்கொள்வது என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதனடிப்படையில் இரண்டாவது கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கப்படாததால்தான் அவர் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பேச்சுக்கு அழைக்கும் பொறுப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட்டதால், ‘கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை?’ என்று ஏற்பாட்டாளர் மாவையிடம் கூட்டத்தின்போது வினவப்பட்டது. அத்துடன், அடுத்த கூட்டத்தில் கஜேந்திரகுமாரை முறைப்படி அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.