மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: மதுரையில் 2வது நாளாக என்ஐஏ விசாரணை

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மதுரையில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்தது.
ஆட்டோவில் பயணித்து காயமடைந்த முகமது ஷாரிக் (24) இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவர், கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்தவர்.
ஷாரிக் மதுரையில் 15 நாள்கள் தங்கியிருந்து குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு பலரைச் சந்தித்துப் பேசியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மங்களூரு போலீஸாா் மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் என்ஐஏ அதிகாரிகளுடன் மதுரை நகரில் உள்ள சில தங்கும் விடுதிகளுக்குச் சென்று, முகமது ஷாரிக் குறித்து விசாரணை நடத்தினா்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் என்ஐஏ அதிகாரிகள் மதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.