வீரமறவர்களுக்கு தாயகத்தில் இன்று மாலை அஞ்சலி நிகழ்வு.
தமிழீழத் தனியரசு அமைப்பதற்காக – தனிநாட்டுக்காக – தமிழ் மக்களின் விடுதலைக்காக – இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி வீரச்சாவைத் தழுவிய வீரமறவர்களை – மாவீரர்களை, தமிழீழ மண்ணின் காவிய நாயகர்களை – தேசத்தின் காவல் தெய்வங்களை, தமிழர்கள் உணர்வுடன் பூசிக்கும் மாவீரர் நாள், தாயக தேசத்தில் இன்று உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்படவுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லங்கள் அல்லது துயிலும் இல்லங்களுக்கு அருகில் அமைந்துள்ள நிலப்பரப்புகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவீரர் நாளை தாயக தேசம் எழுச்சியுடன் இந்த ஆண்டு கடைப்பிடிக்கின்றது. வீதிகள் எங்கும் சிவப்பு – மஞ்சள் கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கின்றன. மாவீரர் அலங்கார வளைவுகள் மிடுக்குடன் அமைக்கப்பட்டுள்ளன. மின் அலங்கார விளக்குகளால் மாவீரர் துயிலும் இல்லங்கள் ஒளியூட்டப்பட்டுள்ளன. துயிலும் இல்லங்கள் அல்லது அதற்கு அருகில் மாவீரர் நாளைக் கடைப்பிடிக்கும் இடங்கள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் சிறுவர்கள், பெரியோர் என அனைவரும் பேரார்வத்துடன் பங்கேற்றனர்.
மாவீரர் நாள்
தமது உயிருக்கும் மேலாக தேசத்தின் விடுதலையை அதியுன்னதமாக நேசித்து அந்த உயரிய இலட்சியத்துக்காக சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களை போற்றி வணங்கும் நன்நாள் இன்று. ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக – எரி நட்சத்திரங்களாக எரிந்தவர்களை நினைவுகூரும் நன்நாள்.
தமிழனத்தின் இருப்புக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை தமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நிறுத்தி தமிழர்கள் நினைவு கூரும் நாள். தமிழர் தாயகம் சுதந்திரத் தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழர் தாயகத்தின் விடிவுக்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்மினிய வீரர்களை தமிழர்கள் தம் இதயக் கோயில்களில் நிறுத்தி பூசிக்கும் நாள்.
எதனையும் தாங்கும் இதயத்துடன் சாவுக்கு அஞ்சா வீரத்துடன் சாவைத் தழுவியவர்கள் தான் மாவீரர்கள். அவர்கள் துயிலும் இல்லங்கள் தாயகத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அல்லது சீரழிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் தரைமட்டமாக்கப்பட்ட துயிலும் இல்லங்களின் எச்சங்களை மீட்டெடுத்து இன்றைய மாவீரர் நாளை எழுச்சியுடன் கடைப்பிடிக்கத் தமிழர் தேசம் தயாராகியுள்ளது.
இராணுவத்தினரால் சில பல கெடுபிடிகள் ஏற்படுத்தப்பட்டாலும், சட்டரீதியான தடை உத்தரவுகள் எதுவும் இல்லாமையால் கடந்த காலங்களை விட பெரும் எடுப்பிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.