காரி விமர்சனம்.
சென்னையில் குதிரை ஜாக்கியாக வேலை செய்யும் நாயகன் ,ஒரு சில காரணங்களால் தன் கிராமத்திற்கு செல்கிறார்,அங்கு யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளையை அடக்குவதற்காக சபதம் எடுக்கிறார் பின் அதை சுற்றி நடக்கும் கதைக்களம் இறுதியில் அந்த சபதத்தை வெற்றிகரமாக முடித்தாரா இல்லையா? என்பதை ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கும் படமே சசிகுமாரின் “காரி”.
சசிகுமாரின் தோற்றமும்,உடல்மொழியும் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும் தொடர்ச்சியாக அவரை ஒரே மாதிரியான வேடத்தில் பார்ப்பது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் வழக்கம்போல தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை திருப்திகரமாக செய்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு காட்சிகளில் அவருடைய நடிப்பு – சிறப்பு. நாயகியாக வரும் பார்வதி நடிப்பதற்கு பெரிய அளவில் இடமில்லை என்றாலும் கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஆடுகளம் நரேனுக்கு மற்றுமொரு நல்ல கதாபாத்திரம், வழக்கம்போல கலக்கியிருக்கிறார்.
குணச்சித்திர வேடங்களில் வரும் அம்மு அபிராமி, பாலாஜி மோகன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பு அருமையாக அமைந்திருந்தாலும், அவை பெரிய அளவில் கதைக்கு வலு சேர்க்கவில்லை என்பது வருத்தம். சுவாரஸ்யமில்லாத முதல் பாதியின் கதைக்களம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திழுக்கவில்லை என்றாலும் இரண்டாம் பாதியின் விறுவிறுப்பும், எமோஷனல் காட்சிகளும், ஓரளவிற்கு படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
குறிப்பாக கடைசி 20 நிமிடங்கள் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் மெய்சிலிப்பை ஏற்படுத்துகின்றன, வாடிவாசலுக்கு சென்று திரும்பிய ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும் காட்சிகளை சிறப்பாக படமாக்கிய ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவிற்கு சல்யூட். படத்திற்கு தன் மிரட்டலான பின்னணி இசையின் மூலம் மேலும் வலு சேர்த்திருக்கிறார் இமான். ஜல்லிக்கட்டு காட்சிகள் வரும்போதெல்லாம் இவருடைய பின்னணி இசை தெறிக்கிறது.
பாடல்களும் ரசிக்கும் படியாக அமைந்திருப்பதும் பாராட்டுக்குரியது. படத்தின் கதை சிறப்பாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் சற்று சறுக்கியிருக்கிறார் இயக்குனர் ஹேமந்த். இரண்டாம் பாதியின் கதைக்களம் கொடுத்த பிரம்மிப்பையும், விறுவிறுப்பையும் முதல் பாதியிலிருந்து கொடுத்திருந்தால், சசிகுமாருக்கு ஒரு நல்ல வெற்றி படமாக இது அமைந்திருக்கலாம்!