கொழுந்துவிட்டெரிந்தன ஈகைச்சுடர்கள்; கண்ணீரால் நனைந்தது தமிழர் தாயகம்.
தாயக விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த வீரமறவர்களுக்கு – உயிர்க் கொடையாளர்களுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வாக நடைபெற்றன. தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பொது இடங்கள் இன்று மாலை கண்ணீரால் நனைந்தன.
தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குப் பொலிஸார், படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் தடைகளை ஏற்படுத்திய போதும் மக்கள் இவற்றைக் கண்டு அஞ்சாமல் வீரமறவர்களுக்குத் துணிவுடன் துயிலும் இல்லங்களுக்கும், பொது இடங்களுக்கும் சென்று சுடரேற்றினர்.
தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் இன்று மாலை 6:05 இற்கு நினைவு ஒலி எழுப்பப்பட்டது. 6:06 இற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 6:07 இற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் சமநேரத்தில் சுடர்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அந்த ஒளி வெள்ளத்தின் மத்தியில் மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.