இலங்கையைப் பொறிக்குள் சிக்கவைக்க இந்தியாவும் மேற்குலகமும் இணைந்து சதி – விமல் பகிரங்கக் குற்றச்சாட்டு.
“இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையைச் சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன.”
இவ்வாறு ‘உத்தர லங்கா சபாகய’வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
‘உத்தர லங்கா சபாகய’வின் நுவரெலியா மாவட்ட மக்கள் சந்திப்பு ஹங்குராங்கெத்தையில் நேற்று நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸவால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு:-
“இலங்கை பொருளாதார ரீதியில் பலமிழந்துள்ளது. இதை வைத்துப் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையின் கழுத்தை இறுக்கிப் பிடிக்க முற்படுகின்றன.
தமது உபாயத்துக்குள் இலங்கையைக் கொண்டுவருவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.
தமது நாட்டு ரூபாவை இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலைமை தானாகவே உருவாகிவிடும்.
மறுபுறத்தில் நாட்டில் போராட்டங்களைத் தூண்டிவிட்டு, அராஜக நிலைமையொன்றை உருவாக்குவதற்கு மேற்குலக நாடுகள் திட்டம் தீட்டுகின்றன.
‘ஹெட்டி’யில் போன்று இலங்கையிலும் ஆட்சி கட்டமைப்பு இல்லாத நிலைமையைத் தோற்றுவித்து, நாட்டைச் சீரழிக்க முற்படுகின்றன. இதற்காக ‘என்ஜீஓ’ காரர்கள் தூண்டிவிடப்படுகின்றனர்.
ஆசிரியர்களுக்கான ஆடையில் மாற்றம் வேண்டும் எனக் கூறுவது இந்த நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும்” – என்றார்.