ஐஸ் போதைப்பொருள் பாவிப்போர் பைத்தியக்காரர்களாக மாறுவார்கள் – மனநல விசேட வைத்தியர் எச்சரிக்கை.
ஐஸ் போதைப்பொருள் பாவனையால் மனநல பாதிப்பு அதிகரிக்கும் என்று கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்தார்.
பாடசாலை, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது என்றும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.
சிலர் குறித்த ஐஸ் போதைப்பொருளை, மாணவர்களிடத்தில் கொண்டு செல்வதற்குத் திட்டமிட்ட வகையில் முயற்சித்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனால், இளைஞர்களின் எதிர்காலம் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஐஸ் உள்ளிட்ட நச்சுப் போதைப்பொருள்களுக்கு, மாணவர்கள் அடிமையாகுவதைத் தடுப்பதற்குக் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னோடி வேலைத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.