தந்தை பார்த்திருக்க A9 சித்தியடைந்த மாணவனுக்கு தீ வைத்த குரூரன்!
தந்தையின் கண்முன்னே க.பொ.த சாதாரண தர பரீட்சையில் A9ஐ எடுத்து சித்தியடைந்த மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த நிகழ்வானது பலரது இதயத்தை உலுக்க வைத்துள்ளது. தீவைதத்தவன் ஊரையே அதிரவைக்கும் ஒரு பயங்கர ரவுடியாம்! அதனால் எவருமே அவனது பெயரை சொல்லவும் அஞ்சுகிறார்களாம்! போலீசிடம் சொன்னாலும், எல்லா தகவல்களும் அவனுக்கே தெரிய வருகிறதாம்! முன்பு ஒருவரை சிலுவையில் அறைந்து கத்தியால் குத்திய சம்பவத்திலும் ஈடுபட்டவனாம்!
கண்டி – அம்பிட்டிய பிரதேசத்தில் இருக்கும் சண்டியர் கும்பலைச் சேர்ந்த ஒருவன், இந்த ஆண்டு GCE O/L பரீட்சையில் ஒன்பது சித்திகளுடன் சித்தியடைந்த அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மாணவனுக்கு தீ வைத்துள்ளதுடன், குறித்த மாணவன் தற்போது பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவனை இழுத்துச் சென்ற இந்த சண்டியன், மாணவனின் தந்தை பார்த்திருக்க மாணவனது உடலில் மண்ணை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளான். அம்பிட்டிய Berrewaerts Collegeல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கண்டி, அம்பிட்டிய, பல்லேகமவில் வசிக்கும் மேற்படி மாணவன், நேற்று முன்தினம் (26ம் தேதி) இரவு, தனது சிறந்த பெறுபேறுகளை பாட்டிக்கு தெரிவித்துவிட்டு, தனது தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே வழியில் காத்திருந்த சண்டியன் தந்தை முன் இக் கொடூரத்தை செய்துள்ளான்.
ஆனால் தீ வைத்த நபர் குறித்து அடையாளம் சொல்ல தெரியவில்லை என மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கழுத்துப்பகுதி முற்றாக எரிந்த நிலையில் குறித்த மாணவனுக்கு இன்று (28) காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
குற்றத்தை விசாரிக்கச் சென்ற போது மாணவனின் குடும்பத்தினர் யாரும் குற்றம் பற்றியோ அல்லது குற்றவாளி பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாது மௌனம் காத்தது வியப்பான நிகழ்வாகும்.
ஆனால், அப்பகுதி மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி , இந்தக் குற்றத்தைச் செய்த குண்டன் அப்பகுதியில் நன்கு அறியப்பட்டவர் என்பதும், இந்தக் குற்றத்தை சொன்னால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடுவேன் என அவனால் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அம்பிட்டிய பிரதேசத்தை அச்சுறுத்தும் கும்பல்களின் உறுப்பினர்கள் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்களை செய்வதாகவும், ஆனால் இது தொடர்பில் பொலிஸார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாவனையாளர்களும் அம்பிட்டிய மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களை சில காலமாக பயமுறுத்தி, திறந்த வெளியில் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.ஆனால், உயிரைப் பணயம் வைத்து அமைதி காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளிக்கும் போது , சில அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு அத் தகவல்களையும் , புகார் கொடுத்த நபர்களின் அடையாளத்தையும் தெரிவிப்பதாகவும், எனவே இந்த கும்பலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையிலும் மக்களால் ஈடுபட முடியவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்றும் அங்கு வாழும் மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவிடம் கேட்ட போது, குற்றம் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அம்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சிலுவையில் அறைந்த சம்பவத்துடனும் , இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இதே சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய குற்றவாளி தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், எனினும் சாத்தியமான அனைத்து பலத்தையும் பயன்படுத்தி அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.