இராணுவம், எஸ்.ரி.எவ். அராஜகம்! – மானிப்பாயில் நடந்தது என்ன?
யாழ்., மானிப்பாய் ஆலடிச் சந்தியில் 28 வயதான இளைஞரை, இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் இணைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். காயங்களுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பாலமுரளி நிரோஷன் என்ற இளைஞரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் சந்திப்பகுதியில் பொலிஸார் நேற்றிரவு வீதி சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு 8.30 மணியளவில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை. பொலிஸார் மறித்தும் இளைஞர் நிற்காமல் சென்றுள்ளார். மானிப்பாய் அந்தோனியார் கோயில் அருகிலுள்ள ஒழுங்கையில் வைத்து இளைஞரைப் பொலிஸார் மடக்கியுள்ளனர்.
இதன்போது இளைஞர் தான் செய்த தவறு என்று பொலிஸாரிடம் கூறியுள்ளார். அங்கு வந்த இளைஞரின் நண்பன், தலைகவசம் அணியாமல் சென்ற தவறுக்குரிய தண்டத்தை விதிக்குமாறு கோரியுள்ளார். அதற்கு அங்கு நின்ற பொலிஸார் இணங்கவில்லை.
அங்கு வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் இல்லை என்பதைக் காரணம் கூறி ரோந்து கடமையிலிருந்த பொலிஸார் தண்டப்பற்றுச் சீட்டை வழங்கவில்லை.
அங்கு வந்த இராணுவத்தினர் இளைஞரின் நண்பனான பாலமுரளி நிரோசனின் நெஞ்சில் பிடித்துத் தள்ளியுள்ளனர். அவரும் இராணுவத்தினரைத் தள்ளியுள்ளார். அந்த நேரத்தில் வீதியால் சென்ற 3 விசேட அதிரடிப் படையினரும் அங்கு வந்து நிறோஷன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தன்னை விடுமாறு நிரோஷன் அபயக் குரல் எழுப்பியபோதும் வீதியில் வைத்து இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும் மூர்க்கமாக அவரைத் தாக்கிவிட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அவர் காயங்களுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்படவில்லை.