A9 சித்தியடைந்த மாணவனை தீயிட்டு எரித்த சண்டியன் கைது
அம்பிட்டிய பிரதேசத்தில் GCE O/L பரீட்சையில் A9 பெற்ற மாணவனை தந்தையின் முன்னிலையில் தீ வைத்து எரித்த குற்றவாளி சற்று முன்னர் மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட புலனாய்வு குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பிட்டிய இகலதன்னேகும்புற எனும் பகுதியைச் சேர்ந்த பூவெல்லே கெதர மலித் நிசன்சல சஞ்சீவ அல்லது பெத்தும் என்ற 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். .
அப் பகுதியை விட்டு தப்பிவிட்டதாக கருதப்பட்ட சந்தேக நபர், அம்பிட்டிய செமனேரியவத்தை என்ற காட்டுப் பகுதியில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது, சந்தேகநபரின் பயணப் பொதியில் கைக்குண்டு ஒன்றும் , பெற்றோலுக்கு நிகரான திரவம் அடங்கிய போத்தல் ஒன்றும் இருந்ததாக விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாணவனை எரித்த குற்றச் செயல் கடந்த 26ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ள போதிலும் , குற்றவாளிகளின் அச்சுறுத்தல் காரணமாக அது வெளிச்சத்துக்கு வரவில்லை. இந்த நிலையில், நேற்றும் இன்றும் ஊடகங்கள் மூலம் மிக அழுத்தமாக செய்திகள் வெளிப்படுத்தியதையடுத்து குற்றவாளியைத் தேடுவதற்காக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் 04 புலனாய்வுக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
குறித்த சந்தேகநபர் பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், சில சமயங்களில் சிறையில் அடைக்கப்பட்டவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.