ஓமான் தூதரக செயலாளருக்கு விளக்கமறியல்.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3ஆவது செயலாளராக பணியாற்றிய ஈ. குஷான் என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைப் பெண்களை சுற்றுலா வீசாவில் ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்கு தொழில் பெற்றுத் தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் மற்றும் அடிமைகளாக விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) அதிகாலை ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து 3.57 மணியளவில் இலங்கை வந்தடைந்த அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, அவருக்கு எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. நிலையில்,
சந்தேகநபரை கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) நேற்றையதினம் (28) நீதிமன்றிடமிருந்து பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர கடவுச்சீட்டை இரத்து செய்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.