கோகுல்ராஜ் கொலை வழக்கு: கோர்ட்டில் வாயைத்திறக்காத சுவாதி..!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2022/11/Thumbnail-15-3-16697945793x2-1.jpg)
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்ட நீதிபதிகள், 2 வாரங்களில் அவர் பதில் அளிக்க ஆணையிட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில் பிறழ் சாட்சியான பிரதான சாட்சி சுவாதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதிகள், சுவாதிக்கு தாங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்ததாகவும், ஆனால் அவர் நீதிமன்றத்தில் எதையும் கூறவில்லை என்றும் கூறினர்.
சிசிடிவியில் இருப்பது சுவாதி தான் என குறிப்பிட்ட நீதிபதிகள், ஆனால் அதை அவர் மறுக்கிறார் என்றும், நீதிமன்றத்தை கேலிக்கு உள்ளாக்கியுள்ளார் என்றும் தெரிவித்தனர். சுவாதி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகவும், அவர் பொய் கூறியதற்கான முகாந்திரம் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த நீதிபதிகள், அவர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.