மொத்தமாக 8 ரூபாய்.. 415 கிமீ பயணித்து 205 கிலோ வெங்காயம் விற்ற விவசாயிக்கு ஷாக் மேல் ஷாக்!
கர்நாடாவின் தின்னாப்பூர் கிராமத்தில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூர் சந்தைக்கு 415 கிலோமீட்டர் பயணம் செய்து எடுத்து செல்லப்பட்ட 205 கிலோ வெங்காயத்திற்கு வெறும் ₹ 8.36 விலை கொடுத்துள்ள ரசீது இணையத்தில் வைரலாகி வருகிறது
வடக்கு கர்நாடகாவில் உள்ள கடாக் மாவட்டத்தின் தின்னாப்பூர் கிராமத்தில் இருந்து சில விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த வெங்காயத்தை பெங்களுருவில் உள்ள யஷ்வந்த்பூர் சந்தைக்கு எடுத்துச்செல்ல தீர்மானித்துள்ளனர்.
சுமார் 205 கிலோ வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு 415 கிலோமீட்டர் பயணித்து சந்தையில் கொடுத்துள்ளனர். வெங்காயத்தை வாங்கும் மொத்த விற்பனையாளர் குவிண்டால் ஒன்றுக்கு ₹ 200 என விலை நிர்ணயம் செய்து, 205 கிலோவிற்கு 410 ரூபாய் என போட்டுள்ளார். அதிலிருந்து சரக்குக் கட்டணத்திற்கு ₹ 377 மற்றும் போர்ட்டர் கட்டணத்திற்கு ₹ 24 கழித்து, மொத்தம் ₹ 8.36 என பில் போட்டுக் கொடுத்துள்ளனர்.
பயிரைப் பயிரிடவும், மாநிலத் தலைநகருக்குக் கொண்டு செல்லவும் ₹ 25,000-க்கு மேல் செலவழித்த விவசாயிகள் தங்கள் 205 வெங்காயத்திற்கு வெறும் ₹ 8.36 கிடைத்த விரக்தியில் அந்த பரிவர்த்தனை செய்ததற்கான ரசீதை இணையத்தில் பதிவிட்டு இனி யாரும் இந்த சந்தையில் விற்க வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த பில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர், “இப்படித்தான் @நரேந்திரமோடி மற்றும் @BSBommai ஆகிய இரட்டை இயந்திர அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது “ என்று விமர்சித்துள்ளார்.
தங்கள் விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கக் கோரி, வட கர்நாடக மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இப்போது அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த ஆலோசித்து வருகின்றனர்.
கடாக் இந்த ஆண்டு இடைவிடாத மழையின் தாக்கத்தை எதிர்கொண்டது. இது பயிர் சேதத்திற்கு வழிவகுத்தது மற்றும் வெங்காயத்தின் அளவை சிறியதாக மாற்றியது. இந்நிலையில் இந்த நஷ்டம் விவசாயிகளுக்கு பெரும் துன்பத்தை அளித்து வருகிறது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் விளைபொருட்களுக்கு கிடைக்கும் அளவு விலை கூட உள்ளூர் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்று விலை குறைவால் மனமுடைந்த விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.