ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்டம் தெளிவாக இல்லை
ஜல்லிக்கட்டு போட்டி எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது குறித்து முழு விவரங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்குகளை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் 15 மீட்டர் தூரம் மட்டுமே ஓட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன என்றும், ஆனால்,. காளைகள் எப்படி 15 மீட்டர் தூரம் மட்டும் ஓட முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மாடுபிடி வீரர்கள் அனைவரும் காளையை அடக்க அனுமதி உள்ளதா?
ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளனவா என நீதிபதிகள் வினா எழுப்பினர். இதில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு போட்டியின் போது தகுதியுடைய ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையை தொட முடியும் என்று தெரிவித்தார்.
அத்துடன், போட்டி நடைபெறும் இடத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்ததாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளது எனவும் வாதிட்டார். மேலும், ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் காளைகளின் இனவிருத்தி மற்றும் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட கபில் சிபல்,இவற்றை கருத்தில் கொண்டு ஜல்லிகட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்டம் தெளிவாக இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள் , ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடம், காளைகள் அடக்கப்படும் முறை உட்பட முழு விவரங்களை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதேவேளையில், தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க அடிப்படையாக இருந்தது எது என, மத்திய அரசும் ஒருபக்க பிராமணபத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி,
வழக்கு விசாரணையை வருகின்ற 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.