அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு பெண்கள் கிடைப்பதில்லை என புலம்பல்
கடந்த சில மாதங்களாகவே முன்னணி ஐடி மற்றும் பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வரிசையாக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் பெருநிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. எனவே, உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதம் கடும் உயர்வைக் கண்டு பொருளாதார மந்த நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணிசமான இந்தியர்கள் ஐடி துறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், தொடர் பணிநீக்கம் நடவடிக்கை காரணமாக ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் தங்களுக்கு வரன் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
என்டிஆர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்காவில் உள்ள தனது 31 வயதான மகனுக்கு திருமணம் செய்ய வரன் தேடிப் பார்த்து வருகிறார். ஆனால், பொங்கல் முடிந்த உடன் திருமணம் செய்து வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில், தற்போதைய சூழலில் திருமணம் வரன் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது என்றார்.
அதேபோல், கன்னவாரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். தான் பெண் தேடாத போது எல்லாம் நல்ல நல்ல வரன்கள் கிடைத்தன.ஆனால் தற்போது தேடும் போது எந்த பெண்ணும் கிடைப்பதில்லை. நல்ல சம்பளம் வாங்கியும் பிரயோஜனம் இல்லை என்று தனக்கு பெண் கிடைக்காத நிலையைக் கூறி புலம்பியுள்ளார். இதேபோல், முன்பு நல்ல வரதட்சணையுடன் பல வரன்கள் வந்தன. தற்போது நாங்களே பாதி திருமண செலவை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னால் கூட திருமணம் செய்ய பெண் வீட்டார் முன்வருவதில்லை என்றார்.