தெரு நாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப மரணம்! – கர்நாடகாவில் சோகம்!
கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதி தலுகா பகுதியில் உள்ள தோனபகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சையது நசருல்லா. இவர் ஒரு விவசாயி. நசருல்லாவுக்கு சையத் மதானி என்ற 4 வயது சிறுவன் மகனாக உள்ளார்.
நசருல்லா நேற்று முன்தினம் வழக்கம் போல தனது வயலுக்கு சென்றுள்ளார். வயலில் நெல் அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக டிராக்டர் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார் நசருல்லா. தனது அப்பா வயலுக்கு டிராக்டரில் போவதை பார்த்த 4 வயது மதானி, தானும் அதில் போக வேண்டும் அவரது பின்னால் ஓடியுள்ளார். டிராக்டர் ஓட்டிக்கொண்டு போன நசருல்லா இதை கவனிக்கவில்லை.
இந்நிலையில், சிறுவன் மதானி வீட்டை விட்டு தெருமுனையை அடைந்த நிலையில், அங்கு நான்கு தெரு நாய்கள் சண்டையிட்டு கொண்டிருந்தன. அதை கவனிக்காமல் அவற்றின் அருகே சென்று மதானி நின்ற நிலையில், சிறுவனை நான்கு நாய்களும் சூழ்ந்து கொண்டு பாய்ந்துள்ளன. இந்த தெரு நாய்கள் சிறுவனை கடிக்கத் தொடங்கிய நிலையில், அவர் வலியால் அலறித் துடித்துள்ளான். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்து சிறுவன் மதானியை மீட்டுள்ளனர்.
பலத்த காயமடைந்த மதானியை மீட்ட அவனது வீட்டார் பத்தராவதி அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அங்கிருந்து சிவமொக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் மதானி பரிதாபமாக உயிரிழந்தான்.
தனது 4 வயது மகனை பறிகொடுத்த கவலையில் மதானியின் பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மீது விசாரணை நடத்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல முறை கிராம பஞ்சாயத்திடம் புகார் அளித்தும் தெரு நாய் தொந்தரவு குறித்து ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, யாரும் தனியாக தெருவில் நடாமாட முடிவில்லை என சிறுவன் மதானியின் தாத்தா சையத் சதத் புகார் தெரிவித்துள்ளார்.