மக்கள் ஆணையை இழந்தது ‘மொட்டு’ – தேர்தலுக்கு அரசு அஞ்ச இதுவே காரணம் என்கிறார் சம்பிக்க.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதே மக்கள் ஆணை தற்போது இல்லை. அதனால்தான் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது.”
இவ்வாறு 43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
‘ராஜபக்சக்களின் ‘மொட்டு’க் கட்சிக்குக் கடந்த தேர்தல்களில் வழங்கப்பட்ட மக்கள் ஆணை இப்போதும் இருக்கின்றதா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்களின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவதற்கு தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தியபோதுதான் தெரிந்தது மக்கள் இருப்பது ‘மொட்டு’வின் பக்கம் என்று.
அதேபோல், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலும் விரைந்து நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆணை யாருக்கு எனபதை அனைவரும் அறியமுடியும்.
எனினும், கடந்த முறை போல் இம்முறையும் மக்கள் ஆணை கிடைக்காது என்ற அச்சத்தில்தான் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயங்குகின்றது” – என்றார்.