ஹைதி நாட்டில் வீடுகளுக்கு தீ வைப்பு- 12 பேர் பலி.

கரீபியன் நாடான ஹைதியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் அவ்வப்போது அமைதியை குலைக்கும் வகையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் அங்குள்ள சிறிய நகரமான கேபரெட் என்ற இடத்தில் ஒரு கும்பல் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதிக்கு வந்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர். ஈவு, இரக்கம் இல்லாமல் அவர்கள் அங்குள்ள 20 வீடுகளுக்கு தீ வைத்தனர்.
தீ மளமளவென பரவியதால் அந்த வீடுகள் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் 12 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வீடுகளுக்கு வெளியில் பிணமாக கிடக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிர் பயத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள்.