திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில், அமெரிக்காவைச் சேர்ந்த பெரியார் பன்னாட்டு அமைப்பின் “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” முதலமைச்சருக்கு வழங்கப்பட்டது. நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மிசா காலத்தில் தமது உயிரை காத்த கருப்பு சட்டைக்காரர்தான் ஆசிரியர் கி.வீரமணி என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், திராவிட இயக்கம் கட்சி அல்ல; கொள்கை உணர்வு. அது வளரும். வளர்ந்து கொண்டே இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அதிமுக கூட்டணி சிதறி போய்விட்டதாக விமர்சித்த அவர், ஈபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்தாலே அது மெகா கூட்டணிதான் எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் இறுதியாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிட மாடல் எனும் இரும்புக்கோட்டையில் மோதினால் மண்டை உடையுமே ஒழியுமே கோட்டை சரியாது என்று பேசினார். முதலமைச்சருக்கு எப்போதும் இந்த அணி பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.