நடிகர் சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்

ஒன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி, விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் ரம்மி சூதாட்டம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் தமிழ்வேந்தன். இவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ஒன்லைன் ரம்மி சூதாட்டத்தால், தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. பலர் மன நலம் பாதிக்கப்பட்ட நபர்களாக மாறிவிட்டனர்.
இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், ரம்மி சூதாட்டத்தை, திரைத்துறை பிரபலங்கள் வாயிலாக விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது. இது குறித்த விளம்பரத்தில் நடித்துள்ள சரத்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஒரு கட்சியின் நிறுவனர். இவரை நடிகர் என்ற குறுகிய வட்டத்தில் பார்க்க முடியாது.
அதேபோல, பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரனும், சமூக பொறுப்பு மிக்கவர். இவரது மகன், பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்து இருப்பது, மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் நடிகர்கள் சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.